Skip to content

இரு கதவுகள்

Untitled-1.jpg

இரு கதவுகள் அடைக்கப்பட
உலகம் திறந்தது

நீல வானிலிருந்து
நீரூற்று நீண்டுகொண்டிருந்தது;
ஊற்றின் எதிர்த்திசையில்
மீன்கள் பறந்தன.

இவன் அதில் நீச்சல் போட வேண்டுமென்று
முடிவெடுத்தான்.
மெல்ல நடக்க;
அருகே செல்ல;
காட்டுப்பகுதியின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும்
தேனீக்கள் அவனை நோக்கி வந்தன…
அச்சத்தில் குனிந்தான்.

கூட்டாய், காற்றிலொரு கூடு அமைத்தன;
எவ்வித உதவியுமின்றி
வெளியில் மிதந்த
அவைக்கண்டு
மெதுவாய் எழுந்தான்.
அச்சம் கொண்டிருந்த விழிகள்
இப்பொழுது ஆச்சரியத்தில் விரிந்தன,
அதனடியில்
சொட்டுக்கள் சொட்டின,
சிவப்பாய்;
இனிப்பாய்;

இரு கைகள் நீட்டி,
அமிர்தம் பிடித்தான்;
மெல்லப்பருகினான்.

உள்நரம்பிலிருந்து ஓர் இனம்புரியா
உந்துதல் பிறந்தது
பைத்தியம்போல் குதித்தான்
பறக்கத் துவங்கினான்
கண்ணைக் கவர்ந்தன
நீரும், நீல வானமும்;
ஊற்றுக்குள் புகுந்தான்.

கண்களில் துளித்தண்ணீர்கள்
பட்டுத்தெறிக்க
ஞாலம் குலுங்கியது;
ஊற்று மறைந்தது;
பறக்கும் சக்தி குறைந்து
கீழே விழுந்தான்.

இரு கதவுகள் உடைக்கப்பட்டன;

”வெளியே போ”,
என்றார் ஆசிரியர்.
வெளியே சென்றான்.

”மறுபடியும் முயல்வோம்”,
என்று விடுதி அறையை நோக்கி நடந்தான்.

Advertisements

நின்றவன் நகர்ந்தவன்

3341815497_7cc8021631_b

பருவத்துளிகள்
பருமனடைந்து
பரவிக்கொண்டிருந்தன;
வெப்பமிழந்த வெளி
சன்னல் வழி
மோகமாய் அழைக்க,
நகர்ந்தவனும் நின்றவனும்
எட்டிப்பார்த்தனர்.
ரயிலில் சென்றவன்
கையிலோ சுண்டல்;
வீட்டில் இருந்தவன்
கையிலோ ஏடு;
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டனர்,
ஒரு கணம்.
காட்டுப்பகுதியின்
தனிவீட்டை
கடந்து சென்றது ரயில்.
மழை அடித்துத் தூறியது
சன்னலை அடைத்து
அவரவர் உலகத்துக்குச் சென்றார்கள்,
நகர்ந்தவன் சுண்டல் உண்டான்
நின்றவன் பக்கத்தை புரட்டினான்.

வாசம்

வாசம் காட்டி வாட்டுகிறது,
அவள் வசிப்பிடமிருந்து வீசும்,
தென்றல்;

திசைமாறச் சொல்கிறேன்.

“முன்பு வேண்டினாய்…
இப்பொழுது வெறுக்கிறாயா?!”
என்றது.

“வெறுக்கவில்லை; மறக்க முயல்கிறேன்”
என்று கூறிவிட்டு
சன்னல்களை அடைக்கிறேன்.

உடல்பிரிந்து

’பொலக்’
சத்தத்தில்
தண்ணீர் தெறிக்க
குதித்த இடத்தை காட்டிக்கொடுத்தன, நீர்க்குமிழிகள்.

சிறிது நேரத்துக்கெல்லாம்
சைரன் வைத்த வண்டிகள்
வந்தடைந்தன

சம்பவமும் சைரனும்
சேர்ந்தால் தான்
சலசலப்பு ஏற்படுமே!

வேடிக்கைப் பார்க்க
குவிந்தார்கள்
பல வேடிக்கை மனிதர்கள்;
அந்த மேம்பாலத்திலே
நெரிசல் நிகழ்ந்தது.

தீயணைப்பு வீரர்கள்
மிதந்துக்கொண்டிருக்கும்
அந்த பதினைந்து வயது
பையனின் உடல் மீட்க
போராடிக்கொண்டிருக்க,
‘காதல்’ என்றும்
‘தேர்வு பயம்’ என்றும்
’வீட்டுப்பிரச்சனை’ என்றும்
காரணம் கண்டது
கூட்டம்.

தீரா இன்னலிலிருக்கும்
பெற்றோரை அழைத்து
போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

உண்மை அறிந்த ஆன்மாவோ
உடல் துறந்து;
உலகம் பிரிந்து;
வெகு தொலைவில்…

கண்ணே சாப்புட்றியா?

02.jpg

”கண்ணே சாப்புட்றியா?”
இல்லமா கொஞ்ச நேரம் ஆட்டும்”
கடிகாரத்தைக் கண்டு
மெஸ்சை நோக்கி நடந்தான்
நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும்;

”கண்ணே கொண்டு வரட்டா?”

ஹ்ம்ம், எட்டு வா…”
அடுக்கி வைத்திருந்த தட்டுகளுள்
ஒன்றினை யெடுத்து கழுவினான்;

சாப்டு கண்ணே..” “ஹ்ம்ம்
“ஊட்டி விடட்டா..” “ஹ்ம்ம்
மெஸ் மேசையில் வைத்திருந்த
சப்பாத்தியைத் தட்டில் போட்டான்;

“நல்லார்க்கா?”
“அருமையா இருக்குமா…”
சுவைப்பாராமல் உண்டான், உரையாடிக்கொண்டே…

”போதுமா கண்ணே…”
போதுமா.. வயிறு புல்லு..”
வயிறு நிரம்பியதென
கை கழுவினான்;

மெஸ்சிலிருந்து அறைக்குச் சென்றான்
அவன் காதில் ஓர் ஓரமாய்
ஒலித்துக் கொண்டிருந்தது
அம்மாவின் குரல்…

’கொய்ங்’கும் ’கூ’வும்

aaa

இழுத்து குத்து…
ஹே ஹே…”
”சவுண்டு வைப் பா..”
என்று ஒருவன் சொல்ல,
ரேடியோ பொட்டிக்கு
கடைக்காரன் கை போனது.
“சீக்கிரம் சாமானக் குடுப் பா”
என்று இவன் சொன்னான்.
கூடைப்பையை
வாங்கிக்கொண்டு வண்டியை எடுத்தான்.

இதற்காகவே டவுனுக்கு
வர யோசிக்கும் அவன்,
சில நேரங்களில்
வேறு வழியில்லாமல் வருவதுண்டு.
சத்தம் கேட்டால் காது வலிக்கும்.
இதனால், அவனுக்கு
”சத்தம் எதிரியா? அவனது காது எதிரியா?”
என்பதொரு புதிர் தான்.
இத்தனைக்கும்
அவன் வண்டி,
சத்தம் எழுப்பும்;
காதை குடையும்;
டி.வி.எஸ் 50.
பொறுத்து தானே ஆக வேண்டும்.

ஒரு பக்கம் வண்டி சத்தம்
பதம் பார்க்க,
மறுபக்கம்…
கற்பூர நாயகியே” என்று
ஊர்த்திருவிழா ஊசி போட்டது;
பேருந்து ஹாரன்
பெயர்த்து எடுத்தது.
சத்தம் சதிசெய்து
சடுகுடு விளையாடியது.
காது, ‘கொய்ங்ங்…’ என்றது
“ஆ…..!”
வலியை பொறுக்க முடியவில்லை,
கண்ணோரம் கண்ணீர் ஒழுகியது.

ஒரு வழியாய்
ஊரோரம் வந்தடைந்தான்;
வயக்காட்டைத் தாண்டினான்;
ஓட்டுவீட்டினுள் சென்று பையை கொடுத்தான்.
வெளியே கயிற்றுக்கட்டிலில்
ஆற அமர அமர்ந்தான்.
பொண்டாட்டி சொம்பில் தண்ணி கொடுக்க,
குடித்தான்;
தென்றல் வந்து தீண்டியது;
கூ…
கூ…
குக்கூ…
இயற்கை புல்லாங்குழலில்
தென்றல் உட்சென்று இசை வந்தது…
“ஆ…..!”
கண்ணோரம் கண்ணீர் ஒழுகியது.

ஆருயிர் மூச்சு

ஒவ்வொரு முறை என்னை
அவள் கடக்கும் பொழுது
என்னுடல் தழுவிச் செல்வாள்,
தோல் குளிர வைப்பாள்,
தலை முடி கலைப்பாள்,
வேர்வைத்துளி துடைப்பாள்,
மல்லிகை மணத்தால் முத்தமிடுவாள்,
ஆருயிர் மூச்சு;
அழகிய இளந்தென்றல்.